கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதியன்று உக்ரைன்மீது போர்தொடுக்க ஆரம்பித்த ரஷ்யா, கிட்டத்தட்ட 6 மாதங்களாகியும் போரை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. உக்ரைனும் முடிந்த அளவுக்கு ரஷ்யப்படைகளை எதிர்த்துப் போர் செய்துவருகின்றன. இதற்கிடையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், ரஷ்யாவைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. அதேசமயம் அமெரிக்கா, உக்ரைனுக்குப் போர் தொடர்பாக நிதியுதவியும் அளித்துவருகின்றது.
இதுவொருபுறம் நடந்துகொண்டிருக்க ரஷ்ய அதிபர் புதின், “மேற்குலக நாடுகள், உக்ரைனில் அமைதியை விரும்பவில்லை. அதோடு அவை ரஷ்யாவை அழிக்க விரும்புகின்றன. எனவே ரஷ்யாவையும் அதன் பிரதேசங்களையும் பாதுகாக்க, ரஷ்யா தன்னுடைய பலம்வாய்ந்த 2 மில்லியன் இராணுவ இருப்புக்களை அணிதிரட்டுகிறது” என அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதின், உக்ரைனுக்கு எதிரான போரில் குறைந்தபட்சம் சுமார் 50,000 குற்றவாளிகளை ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதாக, தி கார்டியன்(The Guardian) இதழில் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இது குறித்து அந்த இதழில் வெளியான அறிக்கையில், 120 கைதிகள் இது தொடர்பாக கையெழுத்திட்டிருப்பதாகவும், ஒருவார பயிற்சிக்குப் பின்னர் அவர்கள் உக்ரைனில் தற்போது போர் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இதில் ஈடுபட்ட அனைத்து கைதிகளுக்கும், 6 மாதங்களுக்குப் பிறகு அதிபரின் மன்னிப்பும், மாதம் 1,00,000 ரூபிள் சம்பளமும் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.