சென்னை: தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு தமிழக அரசுக்கு முறையான காரணங்கள் எதுவும் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, தேசிய கல்விக் கொள்கை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்குப் பின்னர் கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வரும், போகும். ஆனால், கல்விக் கொள்கை நிலையானது. தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிகட்டாயம் இடம் பெறும். கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி கல்வியாலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்ப்பதற்கான முறையான காரணங்கள் எதுவுமே இல்லை.
நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முடிவு என்பதை நான்தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதை அரசு முடிவு செய்வது இல்லை. அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுதான் நீட் தேர்வு. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு மத்திய அமைச்சர்கள் சென்றனர். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பாஜக மகளிரணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் கரு.நாகராஜன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு, கட்சி வளர்ச்சி பணிகள், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.