நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில் எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிவிப்பு

டெல்லி: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில் எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை என்றும், அவர் மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும் சிபிஐ அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தொழிலதிபர்களின் சார்பில் ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் நீரா ராடியா தொலைபேசியில் உரையாடியதாக சர்ச்சை புயல் கிளம்பியது. அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பெரும் புள்ளிகளோடு நீரா ராடியாபேசியதாக வெளியான ஆடியோ இந்திய அரசியலையே உலுக்கியது.

இந்த உரையாடல்கள் தொடர்பாக வருமான வரித்துறை 14 வழக்குகளை பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியது. நீரா ராடியாவின் 8,000 தொலைபேசி உரையாடல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீரா ராடியா- தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய ஆடியோ டேப்பும் அடங்கும். இந்த ஆடியோ 2010ம் ஆண்டே ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடியோ டேப் கசியவிடப்பட்டது தன்னுடைய தன்னுடைய தனிமனித உரிமையை மீறும் செயல் என்று ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 8,000 தொலைப்பேசி உரையாடல்களை ஆய்வு செய்து முடித்த நிலையில், முதற்கட்ட விசாரணையை கைவிடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது. நீரா ராடியாவின் உரையாடலில் எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசியலை உலுக்கிய சர்ச்சை 12 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.