காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, 2008, 2009ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் அவரின் தொலைப்பேசி அழைப்புகளை கண்காணித்து பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீரா ராடியாவுடன் முக்கிய பிரமுகர்கள் பேசிய தொலைபேசி, செல்போன் ரகசிய உரையாடல்கள் கையக்கப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில், நீரா ராடியா, தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய ஆடியோவும் அடங்கும்.
இது தொடர்பாக, கடந்த 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரத்தன் டாடா, நீரா ராடியாவுடன் தான் பேசிய ஆடியோ டேப் கசிந்தது, தன்னுடைய தனிஉரிமயை மீறியதாகும் என தெரிவித்திருந்தார். மேலும், ஆடியோ டேப் விவகாரம் எவ்வாறு வெளியானது என்பது குறித்து அரசின் விளக்கத்தின் நகல் தேவை எனவும் ரத்தன் டாடா கோரியிருந்தார். இந்த வழக்கு கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்டது. அதன்பின் விசாரிக்கப்படவில்லை. இதனிடையே, அந்தரங்க உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தனிநபரின் அந்தரங்க உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், அரசியலமைப்பு அந்த உரிமையை வழங்கியுள்ளது என கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த சூழலில், நீரா ராடியாவின் தொலைபேசி ஒலிப்பதிவுகளை முழுமையாக வெளியிடக் கோரி ‘மக்கள் வழக்காடு மன்றம்’ என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு அமர்வு, நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் விவகாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினை என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நீரா ராடியாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் தரகர் நீரா ராடியா மீது எந்தவிதமான குற்றச் செயல்களையும் கண்டறிய முடியவில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, 2015ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி ரத்தன் டாடாவின் வழக்குடன் தொடர்புடைய வழக்கு விசாரணையின் முடிவு குறித்து சிபிஐ சமர்ப்பித்த சீலிடப்பட்ட அறிக்கை குறித்து விளக்கமளித்தார்.
நீரா ராடியா மீதான விசாரணையில் எந்த குற்றமும் கண்டறியப்படவில்லை. சீலிடப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணையின் முடிவு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கமளித்தார். அக்டோபரில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்கு முன் சிபிஐ அதன் சமீபத்திய நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக 2008 மற்றும் 2009 க்கு இடைப்பட்ட காலத்தில் நீரா ராடியாவின் 5,800 க்கும் மேற்பட்ட டேப் செய்யப்பட்ட உரையாடல்களின் ஒலிப்பதிவுகளை ஆய்வு செய்த பின்னர், சிபிஐயால் அடையாளம் காணப்பட்ட 14 விவகாரங்களை ஆய்வு செய்ய 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடைபெற்ற இது தொடர்பான அனைத்து வழக்குகளும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளன.