கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திலுள்ள உல்லேரஹள்ளியில், கடந்த வாரம், கிராம தெய்வமான பூதம்மாவின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அப்போது, பட்டியலினச் சிறுவன் ஒருவன் ஊர்வலம் சென்றுவந்த சாமி சிலையை கோயிலுக்குள் சென்று தொட்டு பார்த்திருக்கிறான். இதை கவனித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து, சிறுவனையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்து கண்டித்திருக்கிறார்கள். மேலும், “நீங்கள் தொட்டதால் கடவுள் சிலை தீட்டாகிவிட்டது. தீட்டைக் கழிக்க வேண்டும். எனவே, சிலையை தொட்டதற்காக ரூ.60,000 அபராதம் செலுத்துங்கள்!” என சிறுவனின் குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தலித் நல அமைப்பான அம்பேத்கர் சேவா சமிதியின் மாநிலத் தலைவர் கே.எம்.சந்தேஷ், சம்பவ இடத்துக்கு விரைந்து, பட்டியலின குடும்பத்தை அபராதம் செலுத்துமாறு கட்டாயப்படுத்திய நபர்கள்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, இன்று கோலார் காவல்துறை தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கிறது. மேலும், இது குறித்துப் பேசிய காவல் அதிகாரி ஒருவர், “உல்லேரஹள்ளி கிராமத்தில் உள்ள பட்டியலின சாதியினர் கோயிலுக்குள் வர தடை இல்லை என்றாலும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைந்தால் சாபத்துக்கு ஆளாவார்கள் என்ற உபதேசத்துக்கு பயந்து கோயிலுக்குள் நுழைவதைத் தவிர்க்கிறார்கள்.
சிறுவனின் தாய் தினசரி கூலித் தொழிலாளி. இவ்வளவு பெரிய தொகையை தன்னால் செலுத்த முடியாது என அவர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் கெஞ்சிய போதிலும், ரூ.60,000 செலுத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மிரட்டியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் கிராம பெரியவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.