திருமலை – திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகிற 27-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாக அன்னப் பிரசாதம் வழங்கப்படுகிறது. எனவே, அன்னதானம் என்ற பெயரில் தனி நபருக்கோ, அமைப்புகளுக்கோ பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம்.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செகந்திராபாத் அனந்த கோவிந்த தாச அறக்கட்டளை அன்னதானம் செய்யப் போவதாகக் கூறி சமீபத்தில் பக்தர்களிடம் காணிக்கை கேட்டதாக தெரியவந்துள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கும், இந்த அறக்கட்டளைக்கும், எந்த தொடர்பும் கிடையாது.
இதுபோன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் வார்த்தைகளை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். சட்டவிரோதமாக காணிக்கை வசூலிக்கும் அறக்கட்டளைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.