தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் பட்டியல் சமூக சிறுவர்கள், பள்ளிக்கு அருகில் இருக்கும் கடையில் மிட்டாய் வாங்கச் சென்றனர். ஆனால், ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் பள்ளிச் சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுக்கப்பட்டது.
ஏதுமறியாத பள்ளிச் சிறுவர்களிடம் சாதி தீண்டாமையை வெளிப்படுத்திய இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. சிறுவர்களிடம் சாதிய கொடுமையை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பள்ளிச் சிறுவர்களுக்கு நடந்த தீண்டாமை தொடர்பாக தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் கடைக்காரரும் ஊர்நாட்டமையுமான மகேஷ்வரன், துணை நாட்டாமை குமார், ராமச்சந்திர மூர்த்தி, முருகன், சுதா ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடைக்காரர் மகேஷ்வரன், அவரின் நண்பர் ராமச்சந்திரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கோவையில் பதுங்கியிருந்த குமார் என்பவரும் கைதானார். தலைமறைவாக இருக்கும் முருகன்,சுதா ஆகியோரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவருகின்றனர்
இந்த நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ள பிரிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்ச்சைக்குரிய கிராமத்துக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்க முடியும். இதுவரை வன்கொடுமை வழக்குகளில் அந்தப் பிரிவு பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால், இந்த வழக்கில் அதைப் பயன்படுத்த காவல்துறை தென்மண்டல தலைவரான ஆஸ்ரா கர்க் முடிவு செய்தார்.
அதனால் காவல்துறை சார்பாக நெல்லை வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் காவல்துறை சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் வந்தால் மீண்டும் பிரச்னை ஏற்படும் என்பதால் அவர்கள் ஊருக்குள் நுழையத் தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதியான பதமநாபன், பள்ளிச் சிறுவர்களுக்கு நடந்த தீண்டாமைக்குக் காரணமான மகேஷ்வரன், ராமச்சந்திர மூர்த்தி, குமார், முருகன், சுதா ஆகியோர் அடுத்த 6 மாத காலத்துக்கு பாஞ்சாகுளம் கிராமத்துக்குள் நுழையத் தடைவிதித்து உத்தரவிட்டார். தமிழகத்திலேயே முதல் முறையாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் இந்தச் சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.