சென்னை: பாஞ்சாங்குளம் தீண்டாமை சம்பவம் குறித்து அக்டோபர் 7-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய 5 பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 6 மாதம் ஊருக்குள் நுழைய நெல்லை மாவட்ட வன் கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அக்.7-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.