டெல்லி: கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட PM CARES நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா மற்றும் 2 பேரை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து கடந்த 2020ம் அண்டு மார்ச் மாத இறுதியில் பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், 2020ம் அண்டு மார்ச் 27ஆம் தேதி, பிரதமர் மோடி, குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி என்ற பிஎம் கேர்ஸ் (PM Cares) நிதியத்தை தொடங்கினார். இந்த நிதியகத்துக்கு இந்தியர்கள் அனைவரும் இதற்கு நிதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்தியா கொரோனாவை எதிர் கொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ளவும் இந்த நிதியானது உதவியாக இருக்கும்,” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பிஎம் கேர்ஸ் நிதியகத்துக்கு ஏராளமான நிதி குவிந்து வந்தது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. 1948 ஆம் ஆண்டிலிருந்தே பிரதம மந்திரி நிவாரண நிதி (PMNRF) என ஒன்று இருக்கும் போது, இப்போது ஏன் இந்த புது அமைப்பு என பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பி.எம். கேர்ஸ் மூலமாக பெறப்பட்ட நிதி, பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு (PMNRF) அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் பிஎம் கேர்ஸ் நிதி மூலம் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பிஎம்கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா ஆகியோர் பி எம் கேர்ஸ் (PM CARES) நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷி, இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி மற்றும் டீச் ஃபார் இந்தியா(Teach for India) இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோர் பி எம் கேர்ஸ் நிதியின் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இது குறித்து பேசும் போது, புதிய அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களின் பங்களிப்பு பி எம் கேர்ஸ்(PM CARES) நிதியின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.