புதுகும்மிடிப்பூண்டியில் அரசு மேல்நிலை பள்ளியில் ஆய்வகம் திறக்க மாணவர்கள் வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த ஆய்வகம் விரைவில் திறக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்ப்புடன் வலியுறுத்துகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு தமிழக அரசின் தொடக்க கல்வி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என ஒருசில கிராமங்களில் இயங்கி வருகிறது. இங்குள்ள கிராமம் ஒன்றின் ஒதுக்குப்புறத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுகும்மிடிப்பூண்டி, கரும்புக்குப்பம், சிறுபுழல் பேட்டை, கெட்டினமல்லி, தண்டலச்சேரி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக ரூ.10 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டது. எனினும், இந்த ஆய்வகம் மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஆய்வகத்தில் உள்ள உபகரணங்கள் மற்றும் கட்டிடங்களில் பழுது ஏற்பட்டு பாழாகி வருகின்றன. இதனால் அந்த அறிவியல் ஆய்வகத்தில் செய்முறை தேர்வுக்கு பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே, இப்பகுதி மேல்நிலை பள்ளி மாணவர்களின் நலன் கருதி, இப்பள்ளியில் பூட்டியே கிடக்கும் ஆய்வகத்தையும் அதன் உபகரணங்களையும் உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்புடன் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.