சென்னை: இந்தித் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா.
காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 59.
ராஜூ ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகை குஷ்பு மிக உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.
பாலிவுட்டின் நக்கல் மன்னன்
அனில் கபூர் நடிப்பில் 1988ம் வெளியான ‘தேஸாப்’ திரைப்படம் மூலம் கமெடியனாக என்ட்ரி கொடுத்தவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. சீரியல், சினிமா, அரசியல் என ஆல் இன் அழகு ராஜாவாக வலம் வந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா, பாலிவுட்டின் நக்கல் மன்னன் எனக் கூறலாம். சத்ய பிரகாஷ் ஸ்ரீவத்சவா எனும் தன்னுடைய இயற்பெயரை சினிமாவுக்காக ராஜூ ஸ்ரீவஸ்தவா என மாற்றிக்கொண்ட இவர், இந்தி முன்னணி நடிகர்களின் படங்களில் கண்டிப்பாக இடம்பெற்றுவிடுவார். தமிழில் கவுண்டமணியைப் போல பாலிவுட்டில் அதகளமாக காமெடி செய்து மிரளவைத்தவர்.
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த ராஜூ
ராஜூ ஸ்ரீவஸ்தவா கடந்த 10ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டு, வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 41 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். அவரின் மரணச் செய்திக் கேட்டு திரையுலகினரும், ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.
பிரபலங்கள் இரங்கல்
முன்னதாக ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் மனைவி ஷிகாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நலம் விசாரித்தனர். இந்நிலையில், ராஜூவின் மரணச் செய்தியை அறிந்த அவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேபோல், பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் உட்பட ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
டைமிங்கில் கலக்கிய ராஜூ ஸ்ரீவஸ்தவா
சினிமாவில் நடிக்கத் தொடங்கும் முன்னரே, டைமிங்கில் காமெடி அடித்து அனைவரையும் சிரிக்க வைப்பவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. 2005ல் ஸ்டாண்ட்-அப் காமெடி உலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். மேலும், உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராகவும் ராஜூ ஸ்ரீவஸ்தவா இருந்துள்ளார். ஷாருக்கான், சல்மான்கான், அக்சய் குமார் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் காமெடி, பெரிய பலமாக அமைந்துள்ளது.
ட்வீட்டரில் உருகிய குஷ்பு
இந்நிலையில், ராஜூ ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “சிரிப்பு தான் சிறந்த மருந்து என்கிறார்கள். அப்படி நம்மை சிரிக்க வைத்தவர்கள் புறப்பட்டுச் செல்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியின் நினைவுகளை நம்மிடம் விட்டுச் செல்கிறார்கள், அவற்றை நாம் எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ. அவரை எப்போதும் புன்னகையோடும் ஒருதுளி கண்ணீரோடும் நினைவு கூர்வேன். ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி” என மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.