புதுடெல்லி: ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவும், பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் மீண்டும் தாக்கல் செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுகவின் 11.7.2022 அன்று இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களை, குறிப்பாக பொதுச் செயலாளர் பதவி, இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் 13.7.2022 அன்று ஒப்படைத்திருந்தோம். அத்துடன் சேர்த்து 2,532 பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்திருந்தோம். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு, ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பின் நகலையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கின்ற 2500-க்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்களை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் இன்று ஒப்படைத்துள்ளோம். விரைந்து இதன்மீது நடவடிக்கை எடுத்து, தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இதனை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.