திரைப்பட வில்லன்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக அறியப்படுபவர் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கோலோச்சி வரும் ராகுல் தேவ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனங்களை வென்ற நாயகனாக உருவெடுத்தார்.
ராகுல் தேவ், சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குழந்தை பராமரிப்பு குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது. `சாம்பியன்’ எனும் இந்தி திரைப்படம் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த ராகுல், விஜயகாந்த் நடிப்பில் வெளியான `நரசிம்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பரசுராம், மழை, ஆதவன், ஜெய்ஹிந்த்-2, வேதாளம் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், லெஜஸ்ட் சரவணாவின் `லெஜண்ட்’ திரைப்படத்தில் மருத்துவ மாஃபியா கும்பல் தலைவனாகவும் நடித்திருந்தார் ராகுல் தேவ்.
ராகுல் தேவ், கடந்த 1998-ம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான அடுத்த வருடமே, சித்தார்த் என்ற ஆண் குழந்தைக்கு பெற்றோரான தம்பதி, சுமார் 11 வருடங்களுக்கு மேலாக திருமண வாழ்வை சிறப்பாக கழித்து வந்தனர். இவர்களின் வாழ்வை திசை திருப்பக் காத்திருந்தது ஓர் அதிர்ச்சி. ரீனா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும், ரீனாவை காப்பாற்ற இயலவில்லை. 2009-ம் ஆண்டு மறைந்தார். ரீனா மறைவுக்குப் பிறகு, தன் மகன் சித்தார்தை பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு வளர்த்து வருகிறார் ராகுல் தேவ்.
சமீபத்தில், சல்மான்கான் தொகுத்து வழங்கும் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ராகுல் தேவ், தன் மனைவி ரீனா புற்றுநோயால் மறைந்த பிறகு, ஒற்றைப் பெற்றோராக தன் மகனை பல விதமான சிரமங்களுக்கு உட்பட்டு வளர்த்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து பங்கேற்ற ரேடியோ நிகழ்ச்சியில், குழந்தை வளர்ப்பில் தான் உணர்ந்த பாதுகாப்பின்மையைப் பற்றியும் நெகிழ்ச்சி பெருக ராகுல் பேசியது, தற்போது வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல் தேவ், “மனைவி அல்லது கணவன் இல்லாத சூழலில், குழந்தைக்குத் தாயாகவும், தந்தையாகவும் நடந்துகொள்வதும், ஒற்றைப் பெற்றோராக இருப்பதுவும் திரைப்படங்களில் காட்டப்படுவது போல அவ்வளவு எளிதானதல்ல. ஒற்றைப் பெற்றோராக இருக்கும் சூழலில், குழந்தைகளுக்குத் தாய், தந்தை இரண்டுமாக அந்த ஒருவர் இருப்பது கட்டாயமாகிறது. அதற்கான முயற்சியும் இன்றியமையாததாகிறது. குழந்தைகளை வளர்ப்பதில் பெண்களின் பங்கு இணையில்லாதது. குழந்தைகளின் மனதையும், எண்ண ஓட்டங்களையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை பெண்களிடம் இருப்பதால் அவர்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளிடம் பெண்கள் காக்கும் பொறுமையை பல முறை முயற்சி செய்தும் பொறுமை இழந்தவனாக வேண்டிய சூழலுக்கு பலமுறை தள்ளப்பட்டுள்ளேன்.
சித்தார்த்தின் பள்ளிக்கு, பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களுக்கு செல்லும் போது, அங்கு பெரும்பாலும் தாய்மார்களையே பார்ப்பேன். ஒரு சில ஆண்களை பார்க்கவும் நேரிடும். அவர்களோடு அவர்களின் மனைவிமார்களும் உடனிருப்பார்கள். அது போன்ற சமயங்களில் நான் மிகவும் பாதுகாப்பற்றவனாகவும், தனிமையையும் உணர்வேன்” என உருக்கமாகப் பேசியுள்ளார் ராகுல் தேவ்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ராகுல், “இவை மிகுந்த வலி நிறைந்த தருணங்கள். அவற்றில் பலவற்றை நான் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்த வலியை பிறர் உணர்வதையும் நான் விரும்பவில்லை. இது மாதிரியான சூழ்நிலைகள் திரைப்படங்களில் எளிமையான காட்சிகளோடு கடந்து செல்கின்றன. ஆனால், நிஜத்தில் அவ்வாறு இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரீனா மறைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாலிவுட் நடிகை முகதா கோட்சேவிடம், ராகுல் திருமணமற்ற மறுமண வாழ்க்கையை 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.