மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம்! மத்தியஅரசு ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை: மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக  மத்தியஅரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத் தின்படி ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் திமுக அரசு பதவி ஏற்றபிறகு மேலும் பல வசதிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

இத்திட்டத்தில் 1513 சிகிக்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத்திட்டத்தின்கீழ் 937 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 796 அரசு மருத்துவமனைகள் என ஆக மொத்தம் 1733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். குறிப்பாக, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் இதய, நரம்பு, சிறுநீரக நோய்கள், அறுவை சிகிச்சைகளுக்கு உதவி பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள சிகிச்சைகள் பெறலாம். (சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் விவரமாக உள்ளது)

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அதிகமானோர் பயன்பெறுகிறார்கள் என்றும், இந்த திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 23.07.2009 முதல் 31.08.2022 வரை 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர்.

இதன்படி கடந்த 2018 – 19ம் ஆண்டிற்கான மத்திய சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாட்டில் மாநில அரசின் காப்பீட்டு திட்ட செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் கடந்த ( 2018-19) நிதியாண்டில் 1,895 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு திட்ட சிகிச்சை கீழ் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,481 கோடி ரூபாய்க்கும், மூன்றாவதாக ஆந்திர மாநிலத்தில் 1,459 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தானில் 1,029 கோடி ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக உத்தரகாண்டில் 23 கோடி ரூபாய்க்கும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 – 2019 செயல்பாடு விவரங்கள்:

பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனா – ரூ.2,381 கோடி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் , தமிழ்நாடு – ரூ.1,895 கோடி, மகாராஷ்டிரா ஆரோக்கிய யோஜனா – ரூ.1,481 கோடி, என் டி ஆர் வைத்திய சேவா , ஆந்திரா – ரூ.1,459 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்குப் பிறகு மாநில அரசுகளால் செயல்படுத்தக்கூடிய காப்பீட்டு திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.