சென்னை: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக தொகை செலவு செய்யப்பட்டுள்ளது, மத்திய அரசின் சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 23.07.2009 முதல் 31.08.2022 வரை 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் 1513 சிகிக்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும். இத்திட்டத்தின்கீழ் 937 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 796 அரசு மருத்துவமனைகள் என ஆக மொத்தம் 1733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தக்கூடிய காப்பீட்டு திட்டங்களில் தமிழகம் முன்னோடியாக விளங்குவதாக மத்திய அரசின் சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன்படி கடந்த 2018 – 19ம் ஆண்டிற்கான மத்திய சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நாட்டில் மாநில அரசின் காப்பீட்டு திட்ட செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் கடந்த ( 2018-19) நிதியாண்டில் 1,895 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு திட்ட சிகிச்சை கீழ் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,481 கோடி ரூபாய்க்கும், மூன்றாவதாக ஆந்திர மாநிலத்தில் 1,459 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தானில் 1,029 கோடி ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக உத்தரகாண்டில் 23 கோடி ரூபாய்க்கும் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2018 – 19 செயல்பாடு
- பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனா – ரூ.2,381 கோடி
- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் , தமிழ்நாடு – ரூ.1,895 கோடி
- மகாராஷ்டிரா ஆரோக்கிய யோஜனா – ரூ.1,481 கோடி
- என் டி ஆர் வைத்திய சேவா , ஆந்திரா – ரூ.1,459 கோடி
மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்குப் பிறகு மாநில அரசுகளால் செயல்படுத்தக்கூடிய காப்பீட்டு திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.