மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டில் இந்தியர்கள் ஆயுதப்பிடியில் சிக்கியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐடி நிறுவனங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.
இது போன்ற போலி நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கடந்த 5ம் தேதி அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், தாய்லாந்தில் வேலை உள்ளதாக கூறியதை நம்பி சென்ற சுமார் 60 இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. யாங்கூனில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கையில் 30 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்தியர்களை டேட்டா என்ட்ரி பணி எனக்கூறி ஏமாற்றி மியான்மருக்கு கடத்தி சட்டவிரோத பணி செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை இணையதளம் வாயிலாக சட்டவிரோத பணிகளை செய்ய சொல்வதும். அதனை மறுப்பவர்களை கடுமையாக தாக்கி துன்புறுத்துவதாகவும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டில் பணி என்று விளம்பரம் செய்யப்பட்டு, அதன்படி தாய்லாந்து நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன் பிறகு அங்கே சென்றவுடன் சட்டவிரோதமாக அவர்களை கட்டுப்பாட்டில் எடுத்து அங்கிருந்து தாய்லாந்தின் மயான்மர் எல்லையை கடக்கிறார்கள். அங்கிருந்து கடல் கடந்து தீவுகளை கடந்து மியாவடி என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “மியான்மரில் உள்ள இந்தியர்கள் குறித்து இந்திய தூதர் வினய் குமாரிடம் பேசினோம். அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து இந்திய தூதர் என்னிடம் பேசினார் , மேலும் இந்தியர்களை விரைவில் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மரில் இந்தியர்கள் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது