மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கை களை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல் களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும், அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரியவருவதாகவும், ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருவதாகவும், மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளதாகவும், அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர் என்றும், மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத் திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும் என்றும், இது தொடர்பாக மாண்புமிகு பிரதமர் அவர்களின் அவசர தலையீட்டை கோருவதாகவும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.