சென்னை லயோலா கல்லூரியில், இந்தியன் சயின்ஸ் மானிட்டர் (Indian science monitor) அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தமிழக சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ மெய்யநாதன் பங்கேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் இடத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், பூமி தாய்க்கு நன்றி செலுத்துகின்ற இந்த தினத்தில், நாம் இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தை பசுமை தமிழகமாக மாற்றுவதற்காக “பசுமை தமிழகம் இயக்கம்”, அதேபோன்று சதுப்பு நிலங்களை காப்பதற்காக சதுப்பு நில இயக்கம் , கிரீன் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை தொடங்கி இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை எனும் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் 20% பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டு, இது ஒரு மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. மண்ணையும், மக்களையும் , கடல் வாழ் உயிரினங்களையும் மாசு படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம்.
மனிதர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் தருவது பூமித்தாய் தான் அதற்கு நாம் இன்று நன்றி செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்கும் நோக்கத்தில் வருகின்ற செப்டம்பர் 26 , 27 ஆம் தேதிகளில் இது தொடர்பாக சென்னை வர்த்தக மையத்தில் கருத்தரங்குகள் நடக்க இருக்கின்றது.
தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து தான் வருகின்றது . தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 174 கம்பெனிகள் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக எவ்வாறு மக்கள் துணிப்பைகளையும், மஞ்சப்பைகளையும் பயன்படுத்தினார்களோ அந்தக் கருத்தை மக்களிடத்திலே மீண்டும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறோம்.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் முயற்சியை சிறப்பு திட்டமாக செய்யவிருக்கிறோம். மக்கள் கூடும் இடங்களில் இது போன்ற பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்யும் இயந்திரங்களையும் கொண்டு சேர்க்க இருக்கிறோம்.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளிலேயே சென்னையில் 100 மீட்டர் வரை கடல் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சென்னை காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கை தெரிவித்துள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கையில் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் 1076 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 500 கிலோ மீட்டர் பரப்பளவில் தமிழ்நாடு கிளைமேட் சேஞ்ச் மிசன் மூலமாக 173 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன் மொத்த மதிப்பு 500 கோடி ரூபாய் என்றார்.
இந்த திட்டத்தின் மூலம் கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள பணை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். இதன் மூலமாக கடல் அரிப்பை தடுக்கும் திட்டங்களையும் செயல்படுத்தவிருக்கிறோம். எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் சென்னையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு ஏற்ப திட்டமிட்டு அதற்கான செயல்திட்டங்களை எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் பேனா சிலை அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.