மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி காலமானார். 1991 முதல் 1996ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார் 1977, 1980, 1984, 1991 வருடங்களில் 4 முறை சேடப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார். பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா 1999 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியும் வகித்தார்.
இதனையடுத்து 2006ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா தொடர்ந்து திமுகவில் இணைந்து பணியாற்றினார். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா எனும் மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர், இளைய மகன் மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்படத்தக்கது. சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.