மும்பையின் நவ சேவா துறைமுகத்தில் இருந்த கண்டெய்னரில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹெராயின் கடத்தலைக் கண்டுபிடிக்காமல் இருக்க, அதிமதுரக் குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறைக்குக் கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு காவலர்கள் இன்று சோதனை நடத்தினர்.
போலீஸார் நடத்திய சோதனையின் போது, மும்பை துறைமுகத்தில் இருந்த ஒரு கண்டெய்னர் லாரியில், சந்தை மதிப்பில் ரூ.1,752 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ எடை கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் பெட்டகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில், இத்தனை அதிக மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசாரும், போதை பொருள் தடுப்பு அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, நேற்று, அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இது தொடர்பாக இருவரை கைது போலீஸார் செய்தனர். உளவு தகவலின் அடிப்படையில் நேற்று இரவு கரீம்கஞ்ச் மாவட்டம் பதர்கண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கபரிபண்ட் கிராமத்தில் சிறப்புக் குழு ஒன்று அதிரடி சோதனை நடத்தியது. அப்போது ஜமீல்லுதின் என்பவரின் வீட்டில் இருந்து 690 கிராம் ஹெராயின் அடங்கிய 49 சோப்பு டப்பாக்களை போலீசார் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 4.50 கோடி ரூபாய் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.