காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தற்போது போராட்டங்கள் வெடிக்கத்தொடங்கியுள்ளன.
இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆதரவளிப்பதால் ஆளும் பாஜகவுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1995லிருந்து பாஜக இம்மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள் வேண்டும் என்கிற நெருக்கடியில் பாஜக இருக்கிறது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் பாஜகவின் கனவை நினைவாக்குமா என்று தெரியவில்லை.
பாஜகவின் கோட்டை
குஜராத் மாநிலம் பாஜகவின் கோட்டை என்று சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இந்த ‘குஜராத்’ பிம்பம் பெரிதும் கைகொடுத்தது. ஆனால் தற்போதைய நிலைமை அவ்வளவு சீராக இல்லையென்பதை சமீபத்தில் நடந்துள்ள போராட்டங்கள் மூலம் புரிந்துகொள்ள முடிவதாக அரசியல் கூர்நோக்காளர்கள் தெரிவித்துள்ளனர். அகமதாபாத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
1 லட்சம் பேர்
கடந்த 13ம் தேதி நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். மற்றொருபுறம் ஆஷா பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், விவசாயிகள் என மாநிலம் முழுவதும் ஒரே போராட்டக்களமாக மாறியிருக்கிறது. இதற்கிடையில் செப்டம்பர் 18ம் தேதி முதல் இரண்டு நாள் பயணமாக மத்திய தேர்தல் ஆணையத்தின் (CEC) துணை தேர்தல் ஆணையர் தர்மேந்திர ஷர்மா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு குஜராத்திற்கு வந்திருந்தது.
விரைவில் தேர்தல்?
அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டதாகவும், எனவே டிசம்பரில் நடைபெற உள்ள தேர்தலை நவம்பர் மாதத்திலேயே நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆளும் அரசின் அவசரத்தை காட்டுகிறது என பலர் கூறியுள்ளனர். இதற்கிடையில் இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆதரவளிப்பதால் ஆளும் பாஜகவுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் கூட
நேற்று மாநிலம் முழுவதும் காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். அதேபோல முன்னதாக காவல்துறையினர் தங்களுக்கான ஊதியம் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பல பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 229 காவலர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
ஊதிய உயர்வு
அதேபோல கிராம கணக்காளர் (பட்வாரி) பலர் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இவர்கள்தான் அரசின் ஊரக வளர்ச்சித் திட்டங்களை அடிமட்ட அளவில் செயல்படுத்துபவர்கள். ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைந்த அளவில் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இவர்களின் ஊதியத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே ஊதிய உயர்வு வேண்டும் என்று இவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனை எதிர்கொள்ள முடியாமல் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு ரூ. 900 முதல் ரூ. 3,000 ஆக ஊதியம் உயர்த்தப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்தது.
ஓய்வூதிய திட்டம்
ஆனால் இது போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் இதனை எழுத்துப்பூர்வமான கொடுக்க வேண்டும் என்று கணக்காளர்கள் போராட்டங்களை தொடங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, சுகாதார ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் சுமார் 9 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து, ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கவும் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னாள் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தொடரும் என்றும் அரசு உறுதியளித்தது.
ராணுவ வீரர் உயிரிழப்பு
ஆனால் 2005க்கு பின்னர் சேர்ந்தவர்கள் தங்கள் போராட்டங்களை மீண்டும் தொடங்கியுள்ளனர். மற்றொருபுறம் முன்னாள் ராணுவ வீரர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தங்களது ஆதரவை அளித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இந்த போராட்டம் பரவியுள்ளது. மேலும், காவல்துறையினரின் தாக்குதலால்தான் ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
RSS ஆதரவு
மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், அல்லது ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த 14 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்துள்ளன. விவசாயிகளை பொறுத்த அளவில், கடன் தள்ளுபடி, குறைந்தது 12 மணி நேரம் மின்சாரம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக RSSன் பாரதிய கிஸான் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை
ஆக மாநிலம் முழுவதும் பெரும் போராட்டக்களமாக உள்ளன. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி பல் புதிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளதால் ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 182 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அவர்களே ஆட்சியை அமைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.