புதுடெல்லி: கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்தது சரி என கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன் மீதான விவாதம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மனுதாரர் முனிஷா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது வாதத்தில் கூறியதாவது: ஹிஜாப் மீதான தடை, இந்தியாவில் சிறுபான்மையினர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் போன்ற மத வழக்கம், அவசியமானதாக இல்லாமல் இருக்கலாம். மனசாட்சிப்படி ஒருவர் மத வழக்கத்தை பின்பற்றினால், அதில் நீதிமன்றங்கள், அதிகாரிகள் எதுவும் செய்ய முடியாது. முஸ்லிம் நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்கள் நடந்துள்ளன. ஈராக், சிரியா மற்றும் இதர நாடுகளில் ஒவ்வொரு நாடும் தற்கொலைப் படை தாக்குதல் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் அதுபோல் நடப்பதில்லை.
அரசியல் சாசனத்தின் நெறிமுறை, தொலைநோக்கு, ஒவ்வொருவருக்கும் அது அளித்துள்ள உரிமை ஆகியவற்றை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் புரிந்து கொள்ளாதது வருத்தத்துக்குரியது.
ஒரு சமுதாயம் பரிந்துரைக்கும் மத வழக்கத்தை தனி நபர் ஒருவரால் தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்களும் மத நம்பிக்கையாகவோ அல்லது தனிப்பட்ட விருப்பத்தின்படியோ பல நூற்றாண்டுகளாக ஹிஜாப் அணிகிறார்கள். இது சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது போலத்தான். இவ்வாறு அவர் கூறினார்.
நடுநிலையான உத்தரவு
கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று வாதிட்டதாவது:
ஹிஜாப் விவகாரத்தில் பிரச்சினைக்குள்ளான உடுப்பி பி.யு. கல்லூரியில் 2013ம் ஆண்டு முதல் மாணவிகளுக்கு சீருடை கட்டாயமாக்கப்பட்டது.
தொடக்கத்தில் ஹிஜாப் அணியாமல் சீருடை மட்டும் அணிந்து வந்த மாணவிகள், பிஎஃப்ஐ அமைப்பினரின் தூண்டு தலின்பேரால் ஹிஜாபுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கர்நாடக அரசு கல்வி நிறுவனங்களில் மத அடையாள உடைகளுக்கு தடை விதித்தது. இந்த விவகாரத்தில் ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே ஆகும்” என்றார்.