மத்திய பிரதேசத்தில் இதுவரை 7,686 மாடுகள் தோல் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொற்றால் 101 மாடுகள் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை அதிகாரிகள் குழுவை கூட்டிய முதல்வர், சூழ்நிலையை ஆய்வுசெய்து கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் நோய்பரவலை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்குமாறும், பிற மாநிலங்களிலிருந்து கால்நடைகள் போக்குவரத்தை நிறுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். தவிர, தொற்றுக்களை பரப்பும் ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.
தோல்கட்டி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு லேசான காய்ச்சல், கணுக்கள் மற்றும் கால்களில் வீக்கம், பால் சுரப்பு குறைதல், அதீத உமிழ்நீர் சுரப்பு மற்றும் கண்கள், மூக்கிலிருந்து நீர் வடிதல், குறிப்பாக உடல் முழுவதும் கட்டிகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 8 மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவைகளில் இதுவரை 5,432 கால்நடைகள் குணமடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
மாநில அளவிலான நோய் கட்டுப்பாட்டு அறை, 0755-2767583 என்ற தொலைபேசி எண் மற்றும் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்து, எந்த ஒரு அவசரநிலையையும் கவனத்திற்கு கொண்டுவருமாறு அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM