ரஷ்யா-யுக்ரேன்: யுக்ரேனில் போரிட மேலும் 3,00,000 லட்சம் பேர் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

Russian President putin

Russian Presidential Press Service

Russian President putin

யுக்ரேனில் போரிட மேலும் 3,00,000 லட்சம் பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

தற்போது ராணுவத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் யுக்ரேனில் போரிட அழைக்கப்படுவார்கள் என்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

யுக்ரேனில் பணியாற்ற 3,00,000 லட்சம் பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சாய்கூ ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல் முறையாக ராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும், “அணு ஆயுத அச்சுறுத்தல்” என்ற பெயரில் ரஷ்யா மீது மேற்குலக நாடுகளின் மிரட்டல் தொடர்ந்தால், மாஸ்கோ அதன் பரந்த ஆயுதக் குவியலின் வலிமையுடன் பதிலளிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யுக்ரேன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், புதன்கிழமை அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய விளாதிமிர் புதின், “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தப்பட்டால், எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்கு இருக்கும் அனைத்து வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். இது வெற்றுப் பேச்சு அல்ல” என்று கூறியவர், ரஷ்யாவிடம் “பதிலளிக்க நிறைய ஆயுதங்கள் உள்ளதாக” தனது உரையின்போது தெரிவித்தார்.



புதின் ஆற்றிய உரையின் முக்கிய தகவல்களை இப்போது பார்க்கலாம்

யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் ஒரு பகுதியளவு அணிதிரட்டலை புதின் அறிவித்துள்ளார். இதன்படி, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்த பகுதியளவு ராணுவ அணி திரட்டல் நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது.

“தங்களின் ஆக்ரோஷமான ரஷ்ய-விரோதக் கொள்கையில், மேற்கு நாடுகள் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டன. நம் நாட்டிற்கும் நமது மக்களுக்கும் எதிராகத் தொடர்ந்து அச்சுறுத்தல்களைக் கேட்கிறோம். சில பொறுப்பற்ற அரசியல்வாதிகள், யுக்ரேன், க்ரைமியா மற்றும் ரஷ்யாவின் பிற பிராந்தியங்களைத் தாக்க வழிவகை செய்யும் தொலைதூர ஆயுதங்கள், ஏவுகணை அமைப்புகளை வழங்குவது பற்றி மட்டும் பேசவில்லை. மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இந்த பயங்கரவாதச் செயல்களின் மூலம் ஏற்கெனவே பெல்கோரோட் மற்றும் குர்ஸ்க் உள்ளிட்ட எல்லையோர பிராந்தியங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று விளாதிமிர் புதின் கூறியுள்ளார்.

மேற்குலக நாடுகள் அணுசக்தியை வைத்து தங்களை மிரட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டிய புதின், அதுகுறித்து பேசும்போது, யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் அமைதி நிலவுவதை விரும்பவில்லை என்பதை மேற்குலக நாடுகள் காட்டியுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.

புதின்

Reuters

புதின்

ரஷ்யாவை அழிப்பதே தங்களின் நோக்கம் என்பதை மேற்குலக நாடுகள் காட்டியுள்ளதாகவும் யுக்ரேன் மக்களை பீரங்கித் தீவனமாக மாற்ற அந்த நாடுகள் முயன்றதாகவும் புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்க ரஷ்யாவிடம் நிறைய ஆயுதங்கள் உள்ளதாகவும், தான் வெற்றுப் பேச்சு பேசவில்லை என்றும் கூறியுள்ளார்.

டான்பஸில் உள்ள “எங்கள் மக்களை” பாதுகாக்க ரஷ்யா அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.முன்னதாக, தற்போது தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரேனிய பகுதிகளில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற ரஷ்யாவின் அறிவிப்புக்கு மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

லூஹான்ஸ்க், டான்டேஸ்க், சேர்சன் மற்றும் சாப்பரீஷா உள்ளிட்டவற்றின் நிர்வாகங்கள் வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் துவங்கும் என்று அறிவித்துள்ளன.

இத்தகைய போலியான தேர்தல்களை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.