புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை, சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அப்போது அவர் சென்ற மிக் 21 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாராசூட் மூலம் தப்பித்த அபிநந்தன், பாகிஸ்தானின் எல்லைக்குள் விழுந்து அந்நாட்டின் ராணுவத்தின் பிடியில் சிக்கினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்ச் 1-ம் தேதி பாகிஸ்தான் அவரை விடுவித்தது.
இந்நிலையில் இவர் பணிபுரிந்த, ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட மிக்-21 ஸ்குவாட்ரன் படைப்பிரிவு விமானங்கள், இந்திய விமானப் படையின் சேவையிலிருந்து இம்மாத இறுதியில் விடைபெற உள்ளன.
இதற்குப் பிறகு, மூன்று படைப்பிரிவுகளில் மட்டுமே இந்த மிக்-21 விமானத்தின் சேவைகள் இருக்கும். பின்னர் படிப்படியாக அந்த பிரிவுகளில் இருந்து மிக்-21 ரக விமானங்கள் 2025-ம் ஆண்டுக்குள் சேவையிலிருந்து விடுவிக்கப்படும் என்று விமானப்படை தரப்பில் கூறப்படுகிறது.