கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவலான ‘பொன்னியின் செல்வன்’-ஐ இயக்குநர் மணி ரத்னம் படமாக எடுத்திருக்கிறார். எம்ஜிஆர், கமல்ஹாசன் முயன்று எடுக்க முடியாத இந்தப் படத்தை பெரும் முயற்சிக்குப் பிறகு படமாக உருவாக்கியிருக்கிறார் அவர். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனையொட்டி, இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர்கள் பார்த்திபன், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்தார். செய்தியாளர் ஒருவர், வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெறாதது, பட விழாக்களில் அழைகப்படாதது குறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த இயக்குநர் மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்துவைவிட திறமையான கலைஞர்கள் பலர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் மொழி பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. அதனுனடைய சொல் வளமை என்பது அபரீதமானது. பல கலைஞர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோரை இத்தனை நூற்றாண்டுகளாக தமிழ் பார்த்துவிட்டது. வைரமுத்துவும் மிகவும் சிறப்பானவர். அவருடன் இணைந்து பல படங்கள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். அவரின் பல கவிதைகளுக்கு இசை வடிவம்கொடுத்துள்ளோம். இருப்பினும் அவரை விட மிகச் சிறந்த கலைஞர்கள் தமிழில் இருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாகவும், புதியவர்களோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.