புளோரிடா: அமெரிக்காவில் ஒரு வீட்டுக்குள் ஆறடி நீளம் கொண்ட ராட்சத பல்லி நுழைய முயலும் வீடியோ பார்ப்பவர்களை கதிகலங்க செய்துள்ளது.
பொதுவாக பெரும்பாலான பெண்கள், ஏன் சில ஆண்கள் கூட பல்லி, கரப்பான் பூச்சி போன்றவற்றை கண்டால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். அதிகபட்சமாக 3 இன்ச் சைஸ் கொண்ட பல்லிகளை பார்த்தாலே இவர்கள் வெலவெலத்து போய் விடுவார்கள்.
ஒருவேளை, சாதாரண ரக பல்லிகளை விட சற்றே உருவத்தில் பெரிதாக இருக்கும் மர பல்லிகள் வீட்டுக்குள் வந்துவிட்டால் போதும். ஏதோ, டைனோசரஸ் நுழைந்ததை போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்.
திகில் வீடியோ
இதுபோன்ற நபர்கள் இந்த வீடியோவை பார்த்தால், இனி வீட்டில் சுற்றும் ‘விரல்’ சைஸ் பல்லிகளுக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள் என நிச்சயம் சொல்ல முடியும். மேலும், குட்டி சைஸ் பல்லிகள் இருக்கும் இந்தியாவில் பிறந்ததற்காக இவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அப்படியொரு திகில் கிளப்பும் வீடியோதான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தே பலருக்கு சப்த நாடிகளும் அடங்கி போய்விடுகின்றன.
விலங்குகளின் நகரம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது ஒர்லாண்டோ நகர். வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த நகருக்குள் அவ்வப்போது காண்டாமிருகம், மான், கரடி போன்ற வன விலங்குகள் வருவது உண்டு. ஆனால் பெரும்பாலும் இவை மனிதர்களை தொந்தரவு செய்வது கிடையாது. மிக மிக அரிதாகவே இவை மக்களை தாக்கும் நிகழ்வுகள் நடந்தது உண்டு. அதனால் புளோரிடா மக்களுக்கு வனவிலங்குகளை பார்ப்பது சர்வ சாதாரணமானது.
அழையா விருந்தாளி..
இந்நிலையில், ஒர்லாண்டோ நகரில் உள்ள ஒரு வீட்டில் பால்கனி கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்டுள்ளது. கணவர் வேலைக்கு போன நிலையில், அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். யாராவது வந்தால் வாசல் கதவை தான் தட்டுவார்கள். பால்கனியில் யார் தட்டுவது என எண்ணிக்கொண்டே கிச்சனில் இருந்து வீட்டின் ஹாலுக்கு வந்திருக்கிறார்.
அப்போது அங்கு அவர் பார்த்த காட்சியில் அப்படியே மூர்ச்சையாகி நின்றுவிட்டார். ஏனெனில் அங்கு வந்து நின்றது ‘மானிட்டர் லிசார்ட்’ (monitor lizard) எனப்படும் 6 அடி அளவு கொண்ட ராட்சத பல்லி.
துணிச்சலாக வீடியோ..
அந்த பல்லி வீட்டுக்குள் நுழைவதற்காக பால்கனியில் உள்ள கண்ணாடியை திறக்க முயற்சிக்கிறது. ஆனால், கண்ணாடி கதவு லாக் செய்யப்பட்டிருப்பதால் அதனால் உள்ளே நுழைய முடியவில்லை. இதனை பார்த்து பயந்து போனாலும், பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது செல்போனில் அந்த பல்லியை அப்பெண் வீடியோ எடுத்தார்.
பின்னர் தீயணைப்புத் துறையினரை தொடர்புகொண்டு இதுகுறித்து அவர் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாக அந்த பல்லி அங்கிருந்து சென்றுவிட்டது.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இந்த பல்லியை பார்த்து பயந்துபோன பலரும் தாங்கள் அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
பல்லிகளின் அரக்கன்
பொதுவாக, மானிட்டர் லிசார்ட் வகை பல்லிகள் மான், ஆடு போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணக்கூடியது. இதன் பற்களில் விஷம் இருப்பதால், இது கடித்துவிட்டாலே சிறிது நேரத்திலேயே எந்த விலங்காக இருந்தாலும் பக்கவாதம் வந்ததை போன்று படுத்துவிடும். அதனால் இது கஷ்டப்பட்டு வேட்டையாடிய தேவை இல்லை. ஒரே ஒரு கடி. அவ்வளவுதான். பின்னர் அந்த விலங்குகள் அங்கிருந்து ஓடினாலும் ஒரு சில மீட்டர் தூரத்திலேயே பக்கவாதம் வந்து படுத்துவிடும். இதையடுத்து, அந்த விலங்குகளை மோப்பம் பிடித்து சென்று மானிட்டர் பல்லிகள் விழுங்கிவிடும். அம்மாடியோவ்..