தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்துள்ளனர். இப்போராட்டம் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
ஹிஜாப் கட்டாயம்
இஸ்லாமிய சமயநெறிகளை கறாராக பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் ஈரானும் ஒன்று. இந்நாட்டில் பெண்கள் 9 வயது முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயநெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையில் ‘கலாச்சாரப் பிரிவு’ ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹிஜாப் அணிவது, தொழுகைகளை முறையாக செய்வது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் இஸ்லாமிய மத நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வார்கள்.
படுகொலை
இப்படியாக இருக்கையில் நான்கு நாட்களுக்கு முன்னர் குர்திஸ்தானை சேர்ந்தவர் மாஷா அமினி (வயது 22) ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.
போராட்டம்
இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மாஷா அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோதல்
தற்போது இதனைத் தொடர்ந்து, இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. பெண்களும், அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று தலைநகர் தெஹ்ரானில் இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, குர்திஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு
இந்த உயிரிழப்புக்கு பயங்கரவாத குழுக்கள்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது தெஹ்ரானில் உள்ள முக்கிய பல்கலைக்கழக மாணவர்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 2019ல் முதல் எரிபொருள் விலையுயர்வை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பெண்கள் ஹிஜாபை கழற்றி அதை தீயிட்டு எரிக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.