மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் போர் வீரர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது.
சுமார் 7 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. மக்கள் வாழும் நிலை பல நகரங்கள் இழந்துவிட்டன.
உருக்குலைந்த உக்ரைன்
பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனைவிட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர். உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இருப்பினும் ரஷியாவும் தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் தாக்குதலை தொடர்கிறது.
புதின் திட்டம்
7 மாதங்கள் தொடர் தாக்குதல்களை நடத்திய பிறகும் உக்ரைனை முழுமையாக ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் தாக்குபிடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் உக்ரைன் மீது தீவிர தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
3 லட்சம் வீரர்கள்
இன்று உரையாற்றிய அவர், “உக்ரைன் மீது அதிதீவிர தாக்குதல்க்ளை நடத்த 3 லட்சம் படை வீரர்கள் தயாராக வேண்டும். ரஷியா எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப எடுக்கப்படும் நடவடிக்கை இது. ரஷிய தாய் நாட்டை பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது. நாட்டின் இறையான்மையையும், ஒருமைபாட்டையும் காக்க வேண்டும்.
நவ நாஜிக்கள்
ஏற்கனவே ரஷிய ராணுவத்தில் பணியாற்றியவர்களே 3 லட்சம் பேர் கொண்ட இந்த படையில் சேர்க்கப்படுகிறார். இந்த படையினர் உக்ரைனின் நவ நாஜிக்களின் படைகளை எதிர்ப்பது மட்டுமின்றி, 1,000 கிலோ மீட்டர் எல்லையில் தாக்குதல் நடத்திய மேற்குலத்திற்கு பதிலடி தர இருக்கிறார்கள். நேட்டோ படை, தெற்கு ரஷியாவில் உளவுத் தகவல்களை பெறுகிறது.
அணு ஆயுதம்
அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம் ஆகிய நாடுகள் நம் நாட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த வேண்டு என தூண்டி விடுகின்றன. ரஷியாவை போர்க்களத்தில் வீழ்த்த வேண்டும் என அவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அணு ஆயுத தாக்குதலை நடத்த தயங்க மாட்டோம். அழிப்பதற்கு ரஷியாவிடம் பல திட்டங்கள் உள்ளன. நோட்டோவைவிட அவை நவீனமானவை.” என எச்சரித்தார்.