சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு கட்சியை பலப்படுத்தும் வேலையில் உத்தவ் தாக்கரேயும், அவரின் மகன் ஆதித்ய தாக்கரேயும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கோரேகாவில் நடந்த கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, “மும்பை மாநகராட்சிக்கு ஒரு மாதத்தில் தேர்தல் நடத்த உங்கள் சீடர்களுக்கு உத்தரவிட முடியுமா என்று அமித் ஷாவுக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து நடத்துங்கள். அமித் ஷா தனது கட்சி தொண்டர்களிடம் சிவசேனாவுக்கு கடுமையான சவாலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். நான் சவால் விடுகிறேன் முயன்று பாருங்கள். மும்பையுடனான சிவசேனாவின் உறவு பிரிக்க முடியாதது. மும்பை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நாங்கள் ஆழமாக வேறூன்றி இருக்கிறோம்.
உங்களது அனைத்து தந்திரங்களையும் எதிர்த்து போட்டியிட நாங்கள் தயார். நீங்கள் இந்து – முஸ்லிம் பிரச்னையை கிளப்பினால் எங்களிடம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இந்துக்களில் மராத்தியர்கள் மற்றும் மராத்தி அல்லாதவர்களும் எங்களுடன் இருக்கின்றனர். உங்களது பிரித்தாளும் கொள்கை இங்கு வேலைக்கு ஆகாது. மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கேள்விப்பட்டேன். அவர்களிடம் உள்துறை அமைச்சர் இருக்கிறார். அவர்களிடம் துரோகிகள் இருக்கின்றனர். அவர்களிடம் முன்னாபாய்(ராஜ் தாக்கரே) இருக்கிறார். அவர்களுக்கு எதிராக நாங்கள் போட்டியிடுவோம். செமி கண்டெக்டர் தயாரிப்பு தொழிற்சாலை குஜராத்திற்கு சென்ற விவகாரத்தில் பாஜகவும், ஏக்நாத் ஷிண்டேயும் தொடர்ந்து பொய்சொல்லிக்கொண்டிருக்கின்றனர். மும்பை நாட்டின் பைனான்ஸ் தலைநகரம். இங்குள்ள தொழிற்சாலைகளை உங்களது மாநிலத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறீர்கள். பாஜக கழுகுகளை போன்று நடந்து கொள்கிறது. அக்கழுகுகள் மும்பையை சுற்றி வருகிறது.
மும்பையை கடிக்கவோ அல்லது விழுங்கவோ விரும்புகின்றன. இது ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பையை விற்பனை செய்யப்பார்க்கிறார்கள். இப்போது வேதாந்தா சென்றுவிட்டது. இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.
தசரா அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கும்படி கேட்டு மும்பை மாநகராட்சியில் உத்தவ் தாக்கரே தரப்பில் மும்பை மாநகராட்சியில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அதே சமயம் சிவசேனா அதிருப்தி கோஷ்டி சார்பாக பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கொடுக்கப்பட்டு இருந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தங்களது மனு மீது நடவடிக்கை எடுக்க மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சட்டவல்லுனர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே பொதுக்கூட்டம் நடத்த இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உத்தவ் தாக்கரேயை சந்தித்த அதானி:
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை நாட்டின் முதல் பணக்காரராக கருதப்படும் கவுதம் அதானி சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. ஆனால் பதவியில் இல்லாத உத்தவ் தாக்கரே அதானி எதற்காக சந்தித்து பேசினார் என்பது மர்மமாக இருக்கிறது. அதானி பொதுவாக யாரையும் நேரில் சென்று சந்தித்து பேசாதவர். அப்படிப்பட்டவர் ஏன் உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.