முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் இன்று (செப். 22) கலந்துகொண்டார். அப்போது பைகரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
‘ஆ.ராசாவின் தாய் வருத்தப்பட வேண்டும்’
அப்போது பேசிய அவர்,”ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடை பெயர் கூட ராஜாதான். ஆனால், எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைக்கும் வகையில் ஆ.ராசா செயல்படுகிறார். இதுபோன்ற, பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய் தான் வருத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் நடந்த போதும் திமுக தலைவர் பாராமுகமாக அமைதியாக உள்ளார்.
ஏற்கனவே, சட்ட ஒழுங்கு மோசமாக உள்ள சுழலில் மேலும் இதனை பாதிப்படையும் வகையில் பேசி வருகின்றனர். ஆ.ராசா எப்போதும் வருத்தம் தரும் வார்த்தைகளை உதிர்க்கிறார். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து தவறாக பேசினார். தற்போது இப்படி பேசுயுள்ளார்.
எனவே ஆ.ராசாவுக்கு, திமுக தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டும். அப்போது தான் திமுகவிற்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச மதிப்பும் இருக்கும். விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்படுகிறாரா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டிஎஸ்பியை டீ வாங்க சொல்லும் திமுக
ஏன் முதல்வர் ஆ.ராசா விஷயத்தில் வாய் மூடி மெளனியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுவே அதிமுகவினர் இப்படி பேசி இருந்தால் கடுமையான நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும். 2ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை ஆ.ராசா கொடுத்திருப்பார் போல, அதனால் அவரை கண்டிக்க பயப்பிடுகின்றனர் என எண்ணுகிறேன்.
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அடிதடியை கையில் எடுக்கும். மதுரையில் கூட ஒரு தாசில்தாரை திமுக தொண்டரணியை சேர்ந்த நபர் அடித்துள்ளார். இதுபோன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களை திமுகவை சேர்ந்தவர்கள் நிகழ்த்துவார்கள்.எங்க ஆட்சியில் நாங்கள் சொல்வதை போலீஸ் ஏட்டு கூட கேட்க மாட்டார்கள். ஆனால் திமுக ஆட்சியில் டிஎஸ்பி-ஐ டீ வாங்கிட்டு வரசொல்லி அராஜகம் செய்வார்கள். இதுபோன்ற சம்பவம் திமுக வந்தால் எப்போதும் மாறாது. திமுக ஆட்சிக்கு ஸ்டாலின் ஆட்சி வந்தாலும், உதயநிதி வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும்” என்றார்.
‘துர்கா ஸ்டாலின், சபரீசன் இவர்களெல்லாம்…’
அமைச்சர் அன்பில் மகேஷ் ராமேஸ்வரம் தீர்த்தவாரியில் குளித்து சாமி தரிசனம் செய்துகொண்டது தொடர்பான கேள்விக்கு,”இதை ஆ.ராசாவிடம் தான் கேட்ட வேண்டும். அதேபோல், ஆக்டிங் முதல்வராக செயல்பட்டு வரும் சபரீசன் ஊர், ஊராக கோயிலுக்கு செல்கிறார். துர்கா ஸ்டாலின் செல்கிறார். இதற்கெல்லாம் ஆ.ராசா என்ன சொல்வார். இவர்கள் எல்லாம் என்ன விபச்சாரிகளின் பிள்ளைகளா என்ன? எதையும் தாங்கும் இதை வேண்டும் என அறிஞர் அண்ணா சொன்னார். இதையெல்லாம் தாங்கும் இதயம் தான் ஸ்டாலினிடம் உள்ளது போல” என பதிலளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத்திறன் குறித்த கேள்விக்கு,”ஸ்டாலினுக்கு நிர்வாக திறன் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் கட்டபஞ்சாயத்து, ஊழல் பெருகிப்போனது. அதேபோல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை வஸ்துக்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் அருகே போதை பொருட்கள் விற்பனை அதரித்துள்ளதாக மதுரையில் நீதிபதியிடமே புகார் வந்துவிட்டது.
திமுக கூட்டணி கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன்?
அதனை நீதிபதி தலைமையில் முதல்வர் அமைத்த குழுவே குற்றம் சொல்கிறது. இது வெட்கக்கேடானது. இதையும் மூடி மறைக்கிறார் முதல்வர். இதைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை (கண்ணீர் வடிப்பது போல் கிண்டல் அடித்தார்). இந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேடு இருப்பதற்கு பள்ளிக் குழந்தைகளே சாட்சியாக இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் சீருடை கூட சரியில்லை. அது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் முன்பே நடந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
தென்காசி பாஞ்சான்குளம் கிராமத்தில் நடைபெற்ற சாதிய பாகுபாடு குறித்த கேள்விக்கு,”இது ஒரு அருவெருக்கப்படும் சம்பவம். தமிழகம் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமானது. அண்ணன், தம்பி போல பழகிவரும் நம்மிடம் இப்படியான சம்பவம் நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் செயல்படுகிறது. அவையெல்லாம் அகதிகளாக போய்விட்டனரா ? கே.பாலகிருஷ்ணன், திருமாவளன், முத்தரசன் உள்ளிட்டோர் அமைதியாக இருப்பது ஏன். வெளியூர்களுக்கு சென்றுவிட்டனரா ? தேர்தல் சீட்டுக்காக திமுகவிடம் அமைதியாக இருக்கின்றனர். தற்போது பல்வேறு வகையான காய்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ