இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் `கடற்பசு பாதுகாப்பகம்' அமைய காரணம் இதுதான்!

கடற்பசுக்கள் உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளாகும்.  இவற்றின் பிரதான உணவு கடற்புற்கள்தான்.  கடற்புல் படுகைகள், பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும் உணவளிக்கும் இடமாகவும் இருந்து வருகின்றன. இந்தக் கடற்புல் படுகைகளைப் பாதுகாப்பதில் கடற்பசு உதவுகிறது.

கடற்பசு

கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவுகிறது.

பாக்விரிகுடாவை ஒட்டிய கரையோர மக்கள் மீன்பிடி வலையில் பலமுறை கடற்பசுக்கள் சிக்கியபோது, அவற்றை இம்மீனவர்கள் வெற்றிகரமாக கடலில் மீண்டும் விட்டுள்ளனர். கடற்பசுக்களை பாதுகாப்பதன் அவசியத்தைப் அவர்கள் தெரிந்து கொண்டதால் இப்படி செய்கின்றனர். இதற்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கடற்பசுக்கள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே தமிழக அரசு, கடலோர சமூகத்தினருடன் குறிப்பாக உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பாக்விரிகுடாவில் ‘கடற்பசு பாதுகாப்பகம்’ அமைப்பதற்கான முடிவை எடுத்தது.

அதன்படி, தமிழகத்தில் அழிந்து வரும் கடற்பசு இனங்கள் மற்றும் அதன் கடல் வாழ்விடங்களைப் பாதுகாக்க, பால்க் விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்புக் காப்பகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு  கடந்தாண்டு செப்டம்பர் 3-ம் தேதி  சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

கடற்புற்கள்

இந்நிலையில், வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து வரும் கடற்பசுக்களுக்கான பாதுகாப்பகத்தை அறிவித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல் கடற்பசு பாதுகாப்பகமாகும்.

அதன்படி, 448 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பால்க் விரிகுடாவில் ‘கடற்பசு கன்சர்வேஷன் ரிசர்வ்’ என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதன் வாழ்விட இழப்பு காரணமாக கடற்பசு இனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரையில் (பாக்விரிகுடா) காணப்படுகின்றன. எனவே, கடற்பசுக்கள் மற்றும் அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய உடனடித் தேவை தற்போது எழுந்துள்ளது.

இந்த நோக்கங்களை நிறைவேற்ற, கடலோர சமூகத்தினருடன் குறிப்பாக உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, பாக்விரிகுடாவில் “கடற்பசு பாதுகாப்பகம்” அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடற்பசு

இந்த அறிவிப்பின் மூலம் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ அங்கு வாழும் மக்களுக்கு விதிக்கப்படப்போவதில்லை. பாக்விரிகுடாவில், தமிழகம் அறிவிக்கை செய்துள்ள இந்த கடற்பசு பாதுகாப்பகம், இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் எனும் பெருமைக்குரியதாகும். இதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரும் பெருமை கொள்வர். நமது நாட்டில் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும்” என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.