உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது சரியானது தான்- பிரான்ஸ் அதிபர் பாராட்டு

நியூயார்க்,

கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்ட அவர், போருக்கான நேரம் இதுவல்ல என்று வலியுறுத்தினார்.

மேலும் இது குறித்து ஏற்கனவே பலமுறை தொலைபேசி வாயிலாக பேசியதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த ரஷிய அதிபர் புதின், போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஷ்ஷிய அதிபர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி பேசியது சரியானதுதான் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்று பேசுகையில் ” உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினிடம் உக்ரைனுடன் போர் செய்ய இது உகந்த நேரம் அல்ல என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியது சரியானதுதான்.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும், கிழக்கு நாடுகளுக்கு எதிராக இருக்கும் மேற்கத்திய நாடுகளையும் பழிவாங்குவதற்கு உகந்த நேரம் இல்லை. சமமான இறையாண்மை கொண்ட நாடுகள் கூடுவதற்கான நேரம். நாம் எதிர்கொள்ளும் சவால்களை ஒன்றாகச் சமாளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்காவும் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்து இருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.