ராஞ்சி: உத்தரகாண்ட் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வாகனங்கள் சேதமானது. பலர், தங்களது வாகனங்களை திருப்பி கொண்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
பல இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலை எண்-109ல் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தர்சாலி கிராமம் அருகே பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பாதுகாப்பாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் சில வாகனங்கள் சேதமடைந்துள்ளது.
நிலச்சரிவால், வாகனங்களில் வந்தவர்கள், தங்களது வாகனங்களை திருப்பி கொண்டு சென்றனர். சீரமைப்பு பணி முடிந்ததும் போக்குவரத்து தொடங்கும் என ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிப்பால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.