உப்பு சப்பில்லாத வாழ்வில், உடனே நம் மீது அனைவரின் கவனமும் விழவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை காணாமல் போனால் தேடுவார்களா..? காணாமல் போனால் தேட மட்டும் தான் செய்வார்கள். கடத்தப்பட்டால் என்ன நடக்கும்? இப்படி யோசித்திருக்கிறீர்களா… ஆனால் உண்மையிலேயே ஒரு பெண் கடத்தப்பட்டதாக ஏமாற்றி மாட்டிக் கொண்டுள்ளார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 39 வயது பெண்தான் ஷெரி பாபினி. இவர், நவம்பர் 2016-ம் ஆண்டு காணாமல் போயுள்ளார். டே கேரில் இருந்து வழக்கமாகக் குழந்தைகளை அழைத்துவரும் தன்னுடைய மனைவியைக் காணவில்லை என அவரின் கணவர் புகார் அளித்துள்ளார். இவர் காணாமல் போனபோது பல கட்டங்களிலும் தேடுதல் வேட்டையானது காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்குப் பிறகு சாலையோரத்தில் காயத்தோடு கிடந்துள்ளார். இரண்டு பெண்கள் தன்னை துப்பாக்கி முனையில் கடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக எஃப்.பி.ஐ, இந்தப் பெண் அவரின் முன்னாள் காதலன் வீட்டில் தங்கி இருந்ததையும், மற்றவர்களை நம்பவைக்க இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தன்னைதானே காயப்படுத்திக் கொண்டதையும் கண்டறிந்தனர்.
இந்நிலையில் சாக்ரமென்டோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், “பொய் கூறியதற்காகவும், அவமதித்ததற்காகவும் வெட்கப்படுகிறேன். எனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் பலரும் முன்வந்து உதவினார்கள். என்னால் பலரும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்’’ என மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாபினி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞரும் குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு அறிவுறுத்தியதோடு, அவர் மனநல பிரச்னைகளால் அவதிப்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு தேடுதல் வேட்டையின்போது காவல் துறை விசாரணைக்காகச் செலவழித்த தொகையை ஈடுசெய்ய, அமெரிக்க டாலர் மதிப்பில் 3,00,000 செலுத்த ஒப்புக் கொண்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும் மூன்று ஆண்டுகள் காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.