கம்மம்: திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவனை காதலன் மூலம் விஷ ஊசி செலுத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு. இவர் தனது மகளின் வீட்டில் உள்ள மனைவியை அழைத்து வருவதற்காக வல்லபீ பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வல்லபீ கிராமத்தின் அருகே சாலையில் நின்றிருந்த ஒருவர், ஜமீலிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
பின்னர் அவரையும் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஜமீல் வேகமாக பயணித்துள்ளார். அப்போது பைக்கில் லிப்ட் கேட்டு பின் அமர்ந்திருந்த நபர் திடீரென ஜமீலின் முதுகில் ஊசி ஒன்றை குத்தியுள்ளார். சுருக்கென தனது முதுகில் ஊசி குத்தப்பட்டதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயன்றுள்ளார்.
விச ஊசி செலுத்திய நபர்
அப்போது லிப்ட் கேட்டு வந்த நபர், வாகனத்தை நிறுத்துவதற்குள் இறங்கி தப்பி ஓடியுள்ளார். ஆனால் லிப்ட் கேட்டு வந்தவர் தப்பியோடுவதற்கு முன் ஊசி குத்த பயன்படுத்திய சிரிஞ்சை சாலை ஓரத்தில் வீசி விட்டு ஓடியுள்ளார். அதைப் பார்த்த ஜமீல், தனக்கு ஊசி செலுத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

ஜமீல் உயிரிழப்பு
உடனடியாக செல்போன் மூலம் தனது மனைவிக்கு தெரியப்படுத்தியபோது, அவர் பதறிபோய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதற்குள் ஜமீலுக்கு தலைசுற்றல் ஏற்பட்டபோது, அந்த வழியாக செல்வோரிடம் விஷயங்களை கூறி உதவி கேட்டுள்ளார். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் உயிரிழந்தார்.

விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்
இதுகுறித்து ஜக்கைய்யா பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அதில், ஆந்திர மாநிலத்தின் சித்தகானி பகுதியை சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவு
இந்த நிலையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது, கணவர் ஷேக் ஜமால் சாயபு பார்த்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

கணவனை கொல்ல திட்டம்
இதன்பின்னர் கணவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டு இமாம் பீ, மோகன் ராவிடம் கூறியுள்ளார். இதையடுத்து இமாம் பீ கணவரை கொலை செய்ய முடிவு செய்த அவர்கள், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.3500 கொடுத்து 2 விஷ ஊசிகளை வாங்கியுள்ளனர். தொடர்ந்து இமாம் பீ ஒரு ஊசியும், மோகன் ராவிடம் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டனர்.

மனைவியின் சதி செயல்
இமாம் பீயால் கணவருக்கு விஷ ஊசி போட முடியாத சூழ்நிலை நிலவியுள்ளது. இதையடுத்து இமாம் பீ தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து கணவருக்கு போன் செய்து நாளை மகள் வீட்டிற்கு வந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு அவர் கூறியுள்ளார். இதுகுறித்து மோகன்ராவிடம் தெரிவித்த இமாம் பீ அவர் வரும் வழியில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக்கொண்டு விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும் என திட்டம் போட்டு கூறியுள்ளார்.

நண்பர் மூலம் கொலை
மோகன்ராவ் தனது நண்பர்களான வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து பைக்கில் காத்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஷேக் ஜமால் சாயபுவிடம், லிப்டு கேட்டு மோகன் ராவின் நண்பரான வெங்கடேஷ் பைக்கில் ஏறிக்கொண்டுள்ளார். தொடர்ந்து பைக்கில் ஷேக் ஜமால் சாயபுக்கு இடுப்பில் விஷ ஊசியை செலுத்திவிட்டு வெங்கடேஷ் தப்பிச் சென்றார்.

6 பேர் கைது
இதனால் மயங்கி சரிந்த ஷேக் ஜமால் சாயபு பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஷேக் இமாம் பீ, அவரது கள்ளக்காதலன் மோகன் ராவ், அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணத்தை மீறிய உறவால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.