சென்னை: உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின்போது மாவட்டங்கள்தோறும் பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து, அப்பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்களின் மீது, திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பின்னர் ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி காவலர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நேற்று காவலர்களிடமிருந்து மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெழுத்திட்டார்.
முன்னதாக டிஜிபி அலுவலக வளாக முகப்பில், சுற்றுச்சூழல் நலனை முன்னிறுத்தும் வகையில் ‘மகிழம் பூ’ மரக்கன்றை முதல்வர் ஸ்டாலின் நட்டார். பின்னர் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் உள்துறை செயலர்க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டிஜிபிக்கள் சுனில்குமார் சிங், கந்தசாமி, முகமது ஷகில் அக்தர், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், ஜெயந்த் முரளி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டிஜிபி சைலேந்திரபாபு கூறும்போது, “உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் காவலர்களிடமிருந்து மனுக்கள் வாங்கியதன் அடையாளமாக 10 பேரிடம் முதல்வர் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் குறைகளை கேட்டார். மாவட்ட வாரியாக போலீஸாரிடம் இருந்து எத்தனை மனுக்கள் வந்தன, அதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன என கேட்டறிந்தார். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக முதல்வர் உறுதி அளித்தார்” என்றார்
முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் டிஜிபி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அந்த வகையில், கருணாநிதி நட்டுவைத்த மகிழம் பூ மரக்கன்றையே முதல்வர் ஸ்டாலினும் நேற்று நட்டுவைத்தார்.