திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் ஆட்டக்காய்கள்(செஸ் காயின்கள்), இரும்பு ஆயுதம், செப்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரியில் துவங்கியது. இம்மாத இறுதியில் இந்த அகழாய்வு நிறைவு பெற உள்ளது. தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் 20 குழிகள் தோண்டப்பட்டு உறைகிணறு, பானைகள், பானை ஒடுகள், தாயக்கட்டைகள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தில் செய்யப்பட்ட பாசி மணி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு குழியில் 2.5 செ.மீ உயரமும், 2.1 செ.மீ சுற்றளவும் கொண்ட கருப்பு நிற தந்தத்தினாலான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. 5ம் கட்டம் மற்றும் 4ம் கட்ட அகழாய்விலும் மேற்கண்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 11.8 செ.மீ நீளமுள்ள இரும்பு ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆயுதத்தின் ஒரு பகுதி கூர்மையாக உள்ளது. 3.7 செ.மீ அகலமும், 1.7 செ.மீ தடிமனும் கொண்டதாக இந்த ஆயுதம் உள்ளது.
சதுர வடிவிலான துளையுடன் செம்பு தொங்கட்டான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 செ.மீ நீளமும், 2.7 செ.மீ உயரமும், 0.9 செ.மீ தடிமனும் கொண்டதாக இது உள்ளது. மேலும் 10 செ.மீ நீளம் கொண்ட ஒப்பனை கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு மை தீட்டும் குச்சி போன்ற இதன் இருபுறமும் உருண்டை வடிவில் உள்ளது. ஏற்கனவே கீழடியில் காதணி உள்ளிட்ட பெண்கள் அழகு சாதன பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பனை கருவி அதற்கு சான்றாக அமைந்துள்ளது. நேற்றிரவு தமிழக அகழாய்வு துறை இயக்குநர் சிவானந்தம் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து அனைத்து தகவல்களையும் தொல்லியல் துறை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.