குண்டும், குழியுமான சாலையில் 'போட்டோ ஷூட்' நடத்திய மணப்பெண்

திருவனந்தபுரம்,

கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், ஆம்புலன்சின் போக்குவரத்து அதிகமாகி இருப்பதாகவும் கருத்து கூறியிருந்தார். இந்தநிலையில் சாலைகளை சீரமைக்கக்கோரி பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தின.

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாகவே சாலைகள் மோசமாக இருப்பதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் சாலைகளை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சாலைகளின் அவலம் குறித்து வீடியோக்களை வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தன. ஆனால் அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.

போட்டோ ஷூட்

இந்தநிலையில் சமீபத்தில் வெளியான ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ ஒரு பெண்ணின் திருமண போட்டோ ஷூட் வீடியோவாகும். மோசமான சாலையில் திருமண போட்டோ ஷூட் என்ற பெயரில் வெளியான அந்த வீடியோவில் ஒரு மணப்பெண் குண்டும், குழியுமான சாலையில் அழகாக நடந்து வருகிறார்.

அப்போது சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீரும், சேறும் நிரம்பி இருக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் யாரும் இதனை கண்டுகொள்ள வில்லை. இதுதான் கேரள சாலைகளின் நிலை என்று அந்த வீடியோ விளக்குகிறது.

43 லட்சம் பேர் பார்த்தனர்

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கடந்த 11-ந் தேதி பகிரப்பட்டது. இது வெளியான சில மணி நேரத்திலேயே இணையதளத்தில் வைரலானது. இதுவரை இந்த வீடியோவை சுமார் 43 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் லைக் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ மூலம் கேரள சாலைகளின் அவல நிலை குறித்து பலரும் பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.