கோவை: கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசினர். இதனையடுத்து பாஜகவினர் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவின் மனுஸ்மிருதி தொடர்பான பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக கோவையில் பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
அத்துடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காரைக்குடி நிகழ்ச்சியில் வியாழக்கிழமை இரவு பங்கேற்று பேசியிருந்தார்.
இந்நிலையில் கோவை சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டனர்.

இதனிடையே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு எதிராக பாஜகவினர் சில இடங்களில் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. கோவை போலீசார் சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.