வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
உலகில் மீதமிருக்கும் பேருயிர்களில் ஒன்றான காண்டாமிருகங்களுக்கு இயற்கையில் ஒரே ஒரு எதிரி மனிதன் மட்டுமே. சாப்பிடும் அரிசி மற்றும் முட்டைகளை பிளாஸ்டிக்கில் செய்ய வழி தேடும் சீனர்களுக்கு, மருத்துவத்துக்கு மட்டும் உண்மையான காண்டாமிருக கொம்பு, புலியின் பல் போன்றவை தேவைப்படுகிறது. எனவே பாரம்பரிய சீன மருத்துவ சந்தைக்காக காண்டாமிருகங்களைக் கொல்வது இன்றும் தொடர்கதையாக தான் உள்ளது.
கொம்புக்காக நடத்தப்படும் காண்டாமிருக வேட்டையிலிருந்து பொதுவாக எந்த காண்டாமிருகமும் தப்பித்தது இல்லை. வேட்டையாடிகள் கொம்பினை தோண்டி எடுத்து சென்ற பின்னரும், தப்பி உயிர் பிழைத்த ஒரே காண்டாமிருகம் தேண்டி (Thandi) மட்டுமே.
கொம்பு வேட்டையாடிகள் தென் ஆப்பிரிக்காவின் கேரியேகா தேசிய பூங்காவில், 2012ஆம் ஆண்டு தேண்டியுடன் சேர்த்து மேலும் இரண்டு காண்டாமிருகங்களை கொடூரமாக தாக்கி அவற்றின் கொம்புகளை வேட்டையாடிச் சென்றனர். அவற்றுள் ஒரு ஆண் காண்டாமிருகம் உடனடியாக இறந்து விட, தேண்டி மற்றும் தெம்பா ஆகிய இரண்டு காண்டாமிருகங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பூங்கா ஊழியர்களால் கண்டறியப்பட்டன. அவற்றுள் ஆண் காண்டாமிருகமான தெம்பா 3 வாரத்திற்கு பின் இறந்துவிட, அரிதினும் அரிதாக பெண் காண்டாமிருகமான தேண்டி மட்டும் பிழைத்தது.
தேண்டி கண்டறியப்பட்ட போது, அதன் முன்புறம் முழுவதும் வேட்டையாடிகளின் கோடாரியினால் சிதைக்கப்பட்டிருந்தது. 20 முதல் 30 லிட்டர் ரத்தம் வெளியேறிய நிலையில், கண்டறியப்பட்ட தேண்டிக்கு பல கடினமான தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சிகிச்சையை முன்னின்று நடத்திய டாக்டர் வில்லியம் பவுல்ஸ் காண்டாமிருக மனிதன் என்றே அழைக்கப்படுகிறார். இதற்கு முன்னரும் மனித வேட்டையாடிகளால் தாக்கப்பட்ட காண்டா மிருகங்களை காப்பாற்ற அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் எந்த முயற்சியும் வெற்றி பெற்றதில்லை.
வெள்ளை காண்டாமிருகம்
காண்டாமிருகங்களில் ஐந்து இனங்கள் உள்ளன. அதில் தேண்டி தெற்கு வெள்ளைக் காண்டாமிருகம் இனத்தை சார்ந்தது. இவற்றை சதுர உதடு காண்டாமிருகம் என்றும் அழைக்கின்றனர். இவற்றின் விலங்கியல் பெயர் செராட்டோதீரியம் சைமம் (Ceratotherium simum).
தற்சமயம் புவியிலுள்ள காண்டாமிருக இனங்களிலேயே மிகப்பெரியவை இந்த வெள்ளைக் காண்டாமிருகங்கள் தான். 1800 கிலோ எடையும், 5 முதல் 6 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டவை. பெரும்பாலும் 14 காண்டாமிருகங்கள் இணைந்த கூட்டமாகவே இவை வாழ்கின்றன. புல்வெளிகளில் வாழும் இவற்றின் முக்கிய உணவு புற்களே. ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் அருந்தும் காண்டாமிருகங்கள் வறண்ட காலங்களில் 4 முதல் 5 நாட்கள் வரை நீரில்லாமல் வாழும் இயல்புடையவை. இவற்றின் ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள்.
உலகிலுள்ள காண்டாமிருக இனங்களிலேயே தற்சமயம் மிக அதிக எண்ணிக்கையில் (கிட்டத்தட்ட 21,000) உள்ளவையும் இவை தான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 400 முதல் 500 காண்டாமிருகங்கள் கொல்லப்படும் நிலையில், 21,000 ஒன்றும் பெரிய எண்ணிக்கை அல்ல. இதே நிலை தொடர்ந்தால் முற்றிலும் அழிந்துபோன நிலையை 40 முதல் 50 ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த இனம் எட்டிவிடும்.
காண்டாமிருக கொம்பு
2000 வருடங்களுக்கும் மேலாக பாரம்பரிய சீன மற்றும் வியட்நாமிய மருத்துவத்தில் காண்டாமிருக கொம்பினை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு கிலோ காண்டாமிருகக் கொம்பு 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காண்டாமிருக கொம்பினால் செய்யப்பட்ட பரிசுக் கோப்பைகள், அணிகலன்கள், பட்டன்கள், பெல்ட் வகைகள் வாங்குவதை கௌரவமாக கருதும் வழக்கம் இன்றும் சீனர்களிடம் தொடர்கிறது.
காண்டாமிருக கொம்பினால் செய்யப்பட்ட மாத்திரைகளை வலி நிவாரணியாகவும், குணப்படுத்த முடியாத புற்றுநோய், பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி, காய்ச்சல், மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி பாலியல் தூண்டியாகவும், குழந்தையின்மையை போக்குவதற்கும் இவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றில் எந்த விதமான விஞ்ஞான உண்மையும் இல்லை என்பதை பரிசோதனைகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து விட்டனர்.
எனவே காண்டாமிருக கொம்பினால் செய்த மருந்துகள் நோய்களை குணமாக்கும், என்பது மூடநம்பிக்கை என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தற்பொழுது பல தன்னார்வலர்கள் முயன்று வருகின்றனர். வியட்நாமில் சில இடங்களில் அதனால் சிறிதளவு நன்மை விளைந்துள்ளதையும் காண இயலுகிறது. மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது என்பதை, மனிதர்கள் தான் உணர வேண்டும்.
தனியார் காண்டாமிருக பண்ணைகள்
தென் ஆப்பிரிக்காவின் 35% வெள்ளை காண்டாமிருகங்கள் அங்குள்ள தனியார் பண்ணைகளிலேயே பாதுகாக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகளை நம்பியே அப்பண்ணைகள் இயங்குகின்றன. வேட்டையாடிகளின் குறியிலிருந்து தப்ப வைப்பதற்காக, பண்ணைகளில் காண்டாமிருகங்களின் கொம்புகளை வெட்டி விடுகின்றனர். ஒவ்வொரு தனியார் பண்ணை முதலாளியிடமும் அவ்வாறு வெட்டப்பட்ட கொம்புகள் டன் கணக்கில் உள்ளன.
காண்டாமிருகங்களை காப்பதற்கு மிக அதிக அளவில் பாதுகாவலர்களும், பணமும் தேவைப்படுவதினால், கொம்புகளை சட்டபூர்வமாக விற்பதற்கு பண்ணை முதலாளிகள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டே உள்ளனர். அது மட்டுமின்றி சட்டபூர்வமான விற்பனை நடந்தால் கொம்புகளுக்காக காண்டாமிருகங்களை கொல்லும் வேட்டையாடிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
காண்டாமிருக யுத்தம்
1970ஆம் ஆண்டிலிருந்தே காண்டாமிருக யுத்தம் தொடங்கிவிட்டது. மனித வேட்டையாடிகள், ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே 95% ஆப்பிரிக்க காண்டாமிருகங்களை கொன்று விட்டனர். காண்டாமிருகங்களின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள தென்னாப்பிரிக்க அரசாங்கம், இப்பேருயிர்களைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய ராணுவத்தை பயன்படுத்துகிறது.
மேலும் தென் ஆப்பிரிக்காவில் அழிந்து போகும் தருவாயில் உள்ள சிங்கம், யானை, எருமை, காண்டாமிருகம் மற்றும் சிறுத்தை ஆகிய ஐந்து விலங்குகளை காப்பாற்றுவதற்காக, பெரிய ஐந்து விலங்குகளுக்கான பாதுகாப்பு திட்டம் (Big 5 conservation Project) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் தன்னார்வலர்களுக்கு இயற்கை மற்றும் வன உயிரின பாதுகாப்பு குறித்து கற்பிக்கின்றனர். அங்குள்ள பழங்குடி மக்களிடமும் வன உயிர் பாதுகாப்பினை பற்றி எடுத்துச் சொல்கின்றனர். தேண்டியைக் காப்பாற்றியதும் இந்த அமைப்பில் உள்ளவர்களே..
இதை போன்ற சீரிய பாதுகாப்பு முயற்சிகளினால் 2014 ஆம் ஆண்டு 1215 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 594 காண்டா மிருகங்களே கொல்லப்பட்டுள்ளன.
தன்னம்பிக்கை நட்சத்திரம் தேண்டி
கொடூரமான தாக்குதலுக்குப் பின்னரும், தேண்டி குணமானது காண்டாமிருக பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படுகிறது. கொம்புகள் தோண்டப்பட்ட காண்டாமிருகத்தையும் காப்பாற்ற இயலும் என்ற நம்பிக்கையை, காண்டாமிருக காவலர்களுக்கு தேண்டி விதைத்துள்ளது. மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில், தாக்குதலுக்கு பின்னரும் தேண்டி நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது தான். இப்பொழுது தேண்டி ஒரு பாட்டியும் கூட. அதன் முதல் பெண் குட்டி, ஒரு குட்டியை ஈன்று விட்டது.
இரண்டரை முதல் 5 வருடங்களுக்கு ஒருமுறையே இனப்பெருக்கம் செய்யும் காண்டாமிருகங்கள், 16 மாதங்கள் என்ற மிக நீண்ட கர்ப்பகாலத்தினையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு காண்டாமிருக குட்டி பிறப்பதையும், கானுயிர் ஆர்வலர்கள் மிகப்பெரிய வெற்றியாகவே கருதுகின்றனர்.
தென் ஆப்பிரிக்க மொழியில் ”தேண்டி” என்பதற்கு அன்பு என்று பொருள். உண்மை தான். தேண்டி தொடர்ந்து உலகை ஆச்சரியப்படுத்தி கொண்டேதான் இருக்கிறாள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.