சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர், ரங்காச்சாரி தெருவில் பாஸ்கர் (65) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக காகித தட்டு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கு துணையாக, பொறியியல் படித்த இவரது மகன் டில்லிபாபு (35) தொழிற்சாலையை கவனித்து வந்தார். இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
காகித தட்டுக்கான ஆர்டர்களை உரிய நேரத்தில் முடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு பாஸ்கர் மற்றும் டில்லிபாபு மேற்பார்வையில் தொழிலாளர்கள் சிலர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை மூண்டது. இதில் பாஸ்கர், அவரது மகன் டில்லிபாபு, தொழிலாளி பாலாஜி (25) ஆகிய 3 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் டில்லிபாபு தனது பிறந்த நாளன்றே உயிரிழந்துள்ளார்.
சித்தூர் முதலாவது காவல் நிலைய போலீஸார், 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.