சில்க் ஸ்மிதா என்ற பெயரை கேட்டாலே மொத்த கோலிவுட்டும் சிலுக்கும். அந்தளவுக்கு சுமார் 10 ஆண்டுகளாக கோலோச்சிய நாயகி சில்க் ஸ்மிதா. கோலிவுட்டின் தனி ராணியாக வலம் வந்த அவரின் இடத்தை இன்றளவும் யாராலும் பிடிக்க முடியவில்லை. 90களில் வெளிவந்த படங்களில் இவரின் ஒரே ஒரு ஆட்டம் இருந்தால்போதும் அந்தப் படம் வசூல் ஹிட் நிச்சயம் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இதனால், அவரின் திரைப்பயணம் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டது. தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சில்கின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த காலம் அது.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்துள்ளனர். அந்தளவுக்கு வாய்ப்புகளை பெற்று படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா. கவர்ச்சியில் தாராளம் காட்டியதுடன், நடிப்பு மற்றும் வசீகர பார்வை மூலம் அனைவரையும் சொக்க வைத்தார். அவரின் உதட்டசைவில் அன்றைய ரசிகர்களை மயக்கி வைத்திருந்தார் என்று கூட சொல்லலாம். விணு சக்கரவர்த்தியால் திரையுலகுக்கு கொண்டு வரப்பட்ட சில்க் ஸ்மிதா, 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இப்படி பேரும் புகழும் கிடைத்த சில்க்ஸ்மிதா தனிப்பட்ட வாழ்க்கை ஜொலிக்கவில்லை. அந்த வாழ்க்கை மிகவும் கருப்பு பக்கங்களாகவே இருந்தது. காதல் தோல்வி, தயாரிப்பாளராக எடுத்த படங்களால் பெரும் நஷ்டம் என கடனில் மூழ்கினார். இதனால் மன இறுக்கத்துக்கு ஆளான அவர், குடிப்பழகத்தை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மன இறுக்கத்தில் இருந்த சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு சென்னையில் அவருக்கு சொந்தமான குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும், அவரது மரணத்தைச் சுற்றி இன்றளவும் பல சர்ச்சை கதைகள் உலாவிக் கொண்டிருக்கின்றன.