தரம்சாலா: தனக்காக வருந்தக்கூடிய நண்பர்கள் இருக்கும் இந்தியாவில் மரணமடைய விரும்புவதாக தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் 1935ம் ஆண்டில் பிறந்தவர் தலாய் லாமா. இவரது இயற்பெயர் லாமொ தொண்டுப். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 6 வயதில் கல்வி கற்கத் தொடங்கினார். படிப்பு, தியானம், விளையாட்டு என இளமைப் பருவம் கழிந்தது.
தொடர்ந்து வயது ஏற ஏற விளையாட்டுகளைக் குறைத்துக்கொண்டு ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார். 25வது வயதில் புத்த சமயத் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பின்னர் 14வது தலாய் லாமாவாக 1950ல் முறைப்படி பொறுப்பேற்றார்.
தலால் லாமா
திபெத்திய புத்த மதத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரைக் குறிப்பிடும் பெயர்தான் ‘தலாய் லாமா’. தங்களது மரபு வழித் தலைவராக திபெத் மக்கள் இவரை ஏற்றுக்கொண்டனர். ஆனால், திபெத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா இதை ஏற்கவில்லை. சீனத் தலைவர்களுடன் 1956ல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா வந்த தலாய் லாமா
திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்க சீனா தயாராக இல்லை. இதனால் 1959ல் திபெத் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் இமாச்சல் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தஞ்சம் புகுந்தார். அதுமுதல் இந்தியாவில் தான் வசித்து வருகிறார்.
தொடர்ந்து திபெத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், சீனாவோ இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயாராக இல்லை. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருகிறார்.
மரணம் தொடர்பாக தலாய் லாமா
இந்த நிலையில், தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடினர். அப்போது தலாய் லாமா பேசுகையில், தனது மரணம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதை நினைவுகூர்ந்தார். அதில், இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் நான் உயிரோடு இருப்பேன்.
இந்தியாவில் மரணமடைய விருப்பம்
ஆனால் இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. அதனால் இந்திய மக்கள் மத்தியிலேயே மரணமடைய விரும்புகிறேன். மாறாக, செயற்கைத்தனம் நிறைந்த சீன அதிகாரிகள் மத்தியில் இறக்க விரும்பவில்லை.
ஒரு மனிதர் எப்படி உயிரிழக்க வேண்டும்?
சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, ஃபேஸ்புக்கில் தலாய் லாமா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உண்மையாகவே வருந்தக்கூடிய நம்பிக்கையான நண்பர்கள் மத்தியில் தான் ஒரு மனிதர் உயிரிழக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.