புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், சூரியசக்தி தகடுகள் உற்பத்திக்கு ரூ.19 ஆயிரத்து 500 கோடிக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்மூலம் ஆண்டுக்கு 65 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சூரியசக்தி தகடுகள் நிறுவப்படும். மேலும், இத்துறையில் ரூ.94 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்துறையில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன், சூரியசக்தி தகடுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறையும்.
வெளிப்படையான நடைமுறை மூலம் சூரியசக்தி தகடு உற்பத்தி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். சூரியசக்தி தகடு உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவிய பிறகு, 5 ஆண்டுகளுக்கு இந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
தேசிய தளவாட கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி, கடந்த வாரம் இந்த கொள்கையை அறிமுகம் செய்தார். நாடு முழுவதும் தடையற்ற சரக்கு போக்குவரத்தை ஊக்குவிப்பதும், சரக்கு போக்குவரத்து செலவை குறைப்பதும் இதன் நோக்கங்கள் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 முதல் 14 சதவீதமாக உள்ள சரக்கு போக்குவரத்து செலவுகளை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த பின்னணியில், தேசிய தளவாட கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செமிகண்டக்டர்கள் உருவாக்குவதற்கான திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது, செமிகண்டக்டர் உற்பத்தியில் முதலீட்டை அதிகரிக்கும்.
இத்தகவல்களை மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.