சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளை பழைய பெருங்களத்தூர்,பாரதிநகர்,கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 31 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி மினி வேன் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மினி வேன் பார்வதி நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேனில் எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த 7 வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் சிறுமிக்கு ஏழு பற்கள் உடைந்து முகம், கை,கால்களில் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தின. சிறுமிக்கு மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகின்றனர். பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற வெங்கட்ராமன் என்பவர் பள்ளி வாகனத்தை சாலையிலே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும், பள்ளி வாகனத்தில் இருந்து சிறுமி கிழே விழுந்த தகவலை அறிந்த பெற்றோர்கள், பள்ளி வாகனத்தில் இருந்த அனைவரையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பள்ளி வாகனத்தில் இருந்து சிறுமி சாலையில் விழுந்த போது பின்புறம் எந்த வாகனமும் வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி வாகனத்தில் எமர்ஜென்சி கதவு உடைந்து இருப்பதை பார்க்காமல் பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் மீதும், பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பீர்க்கன்காரனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் வாகனம் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அந்த வாகனத்தில் துருப்பிடித்து இருந்த எமர்ஜென்சி கதவு, வேகத்தடையை கடக்க முயலும் பொழுது கழன்று அருகில் இருந்த காரின் மீது விழுந்ததும் தெரியவந்தது.