வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் அதிகளவு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‛உலகில் எந்த அரசியல் தலைவருக்கும் வெளிநாடுகளில் இவ்வளவு சொத்துக்கள் இல்லை, ஏன், இந்திய பிரதமர் மோடிக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள்’ என பிரதமர் மோடி வெளிநாடுகளில் சொத்து சேர்க்காதது குறித்து பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், சில மாதங்களுக்கு முன்பு நடந்த நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பில் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.
இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்த நிலையில், சமீபத்தில் பெய்த பருவமழையால் வெள்ளத்தால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதைனையடுத்து இம்ரான் கான், ஷெபாஸ் ஷெரீப் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் இம்ரான் கான் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டில் உள்ள ஷெபாஸ் ஷெரீப்பின் சகோதரர் நவாஸ் ஷெரீப்பிற்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளின் மதிப்பு பல மில்லியன் ஆகும். இந்த சொத்துகளின் அளவை யாராலும் கணக்கிட முடியாது.
உலகில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இந்த அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இல்லை. நமது அண்டை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்று கூட பாருங்கள். இவ்வாறு பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement