சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பக்கா கமர்சியல் திரப்படமாக வெளியான திருச்சிறம்பலம் திரையரங்குகளில் 100 கோடி வசூலித்தது.
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.
ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம்
கர்ணன் திரைப்படத்திற்கு பின்னர் தனுஷின் படங்கள் அனைத்தும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்த இந்தப் படத்தில், தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், அனிருத் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற திருச்சிற்றம்பலம், பாக்ஸ் ஆபிசில் 100 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தியது.

ஷோபனாவாக அசத்திய நித்யா மேனன்
திருச்சிற்றம்பலம் படத்தின் கதை, திரைக்கதை தமிழ் திரைப்படங்களில் ஏற்கனவே பார்த்துப் பழகியதாக இருந்தாலும், கேரக்டர்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. முக்கியமாக நித்யா மேனனின் ஷோபனா கேரக்டர் ரசிகர்களை ஏங்க வைத்தது. ஷோபனா என்ற பெஸ்டி கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தனுஷ் – நித்யா மேனன் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் செம்மையாக செட்டாகி இருந்தது. இதுவே படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் என்றும் விமர்சகர்களால் சொல்லப்பட்டது.

ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் ரொம்பவே என்ஜாய் செய்து ரசித்தனர். ஃபேமிலி ஆடியன்ஸ்க்கும் சரியாக ஒர்க் அவுட் ஆன இந்தத் திரைப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் நாளை (செப் 23) முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. திரையரங்க ரசிகர்களை போல, ஓடிடி ஆடியன்ஸும் இப்போது திருச்சிற்றம்பலம் படத்தை கொண்டாட தயாராக உள்ளனர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமா?
ஓடிடி தளங்களைப் பொறுத்த வரையில் சன் நெக்ஸ்ட் ஓடிடிக்கு வாடிக்கையாளர்கள் குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும் படங்கள், நெட்பிளிக்ஸ் தளத்திலும் ஸ்ட்ரீமிங் ஆவது வழக்கம். ஆனால், நாளை சன் நெக்ஸ்ட்ன் ஓடிடியில் வெளியாகும் திருச்சிற்றம்பலம், நெட்பிளிக்ஸில் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சன் நெக்ஸ்டில் வெளியான ஓரிரு தினங்களில் நெட்பிளிக்ஸிலும் ஸ்ட்ரீமிங் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.