மதுரை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை என்ற தகவலும், அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கரும்பு கடையில் உள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு அவரை கைது செய்த அதிகாரிகள் அவரை அங்கிருந்துஅழைத்துச் சென்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பணம் வருவது தொடர்பாக, தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. திடீர் சோதனைகள் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை நடத்தப்படும் இடங்களில் பாதுகாப்பிற்காக சி.ஆர்.பி.எஃப் போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாலிநோக்கத்திலும் NIA சோதனை
ராமநாதபுரம் மாவட்டம்,ஏர்வாடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை ஆகிய புகாரை அடிப்படையாக கொண்டு இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
திடீரென நடத்தப்படும் இந்த சோதனைகளை அடுத்து, முன்னேற்பாடாக உள்ளூர் போலீசார் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளை விசாரணை நடத்தும் அமைப்பு NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஆகும். இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்தால், அவர்கள் தொடர்பான விவரங்களை அறிய அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இது போன்ற சோதனை நடத்தப்படுவது வழக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வாலிநோக்கத்தில் சோதனை நடத்தியபோது பொது மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்