ஜெனிவா: உலகில் தொற்றா நோய்கள் காரணமாக இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பல்வேறு புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தொற்றா நோய்களான இதய பாதிப்பு, புற்றுநோய், நுரையீறல் பாதிப்பு ஆகியவை காரணமாக உலகில் 2 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு நிகழும் உயிரிழப்புகளில் 10-ல் 9, வருவாய் குறைந்த அல்லது மத்திய தர வருவாய் கொண்ட நாடுகளில்தான் நிகழ்கிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுத்துக்கொள்ளவோ, வந்தால் உரிய உயர் சிகிச்சையை எடுத்துக்கொள்ளவோ, இதுபோன்ற நோய்கள் வருவதை முடிந்தவரை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவோ போதிய வருவாய் இல்லாததே இதற்குக் காரணம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 70 வயதுக்கு உட்பட்டவர்களில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் தொற்றா நோய்கள் காரணமாக உயிரிழப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், உயிரிழப்பவர்களில் 86 சதவீதம் பேர் குறைந்த வருவாய் அல்லது நடுத்தர வருவாய் உள்ள நாடுகளைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.
உலக உயிரிழப்புகளில் தொற்றாநோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் மிக அதிகம் என தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்களில் 4-ல் 3 பேர் இத்தகைய நோய்களால்தான் உயிரிழக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களில் 6-ல் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
சமூகம், சுற்றுச்சூழல், வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவையே தொற்றா நோய்கள் பெருக முக்கியக் காரணம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.